மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 01:09
கம்பம்; மகாபாரதம் ஐந்தாவது வேதம் என அழைக்கப்படுவது ஏன் என்று கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில் ஆன்மிக பேச்சாளர் மோகன சுந்தரம் விளக்கினார்.
கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "விநாயகர் பெருமை " என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆன்மிக பேச்சாளர் மோகன சுந்தரம் பேசியதாவது : விநாயகர் என்றால் சிறந்த தலைவர் என்று பொருள் . தனக்கு மேல் தலைவன் இல்லை என்பதாகும். பிரணவத்தின் வடிவமாகவும், துன்பம் தீர்க்கவும் தோன்றியவர் விநாயகர். விநாயகர் வழிபாட்டில் உள்ள தோப்புக்கரணம் போடுவதால் அறிவு வளர்ச்சி , உடல் ஆரோக்கியம் கிடைக்கும். தலையில் குட்டிக் கொள்வதால் கூரிய மதி நுட்பம் கிடைக்கும்.. அருகம்புல் வழிபாட்டால் பிறவித் துயர் நீங்கும். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்து 12 திருமுறைகள் கிடைக்க இராஜ ராஜ சோழனுக்கு உதவினார். வேதவியாசர் சொல்ல தனது தந்தத்தால் மகாபாரதம் என்ற காவியத்தை எழுதினார். விநாயகர் எழுதியதால் தான் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகிறது. பட்டினத்தாரின் முதன்மை அலுவலர் சேந்தனாரை சிறை மீட்டார். ஒளவையார் அருளிய விநாயகர் அகவலை தினமும் படித்தால் துன்பமும், நவக்கிரக தோஷங்களும் நீங்கும். நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு . நவநிதிப் பேறு, மன அமைதி முதலிய நலன்கள் விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும். இவ்வாறு பேசினார்.