பதிவு செய்த நாள்
14
செப்
2024
11:09
அவிநாசி; அவிநாசி அருகே மேற்குப்பதி கிராமத்தில் அபிஷேக புரத்தில் எழுந்தருளியுள்ள அபிஷேகவல்லி உடனமர் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகுராஜ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அவிநாசி வட்டம் ,மேற்குப்பதி கிராமத்தில் அபிஷேகபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள அபிஷேகவல்லி உடனமர் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகுராஜ பெருமாள் கோவிலில் நாளை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன 57வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், கூனம்பட்டி திருமடம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ ஸ்வாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் கன்யா லக்னத்தில் நடைபெறுகிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் முன்னொரு காலத்தில் ஐராவதம் எனும் இந்திரனின் வெள்ளை யானை, லட்சுமி பூஜித்து வந்த ஹோமத்தில் உள்ள பிரசாதங்களை காலால் மிதித்தது. இதனால் கோபமுற்ற லட்சுமி சாபத்தால் வெள்ளை யானை கருப்பாகியது. தனக்கு ஏற்பட்ட சாபத்தை விமோசனம் அடைய இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளிய ஐராதீஸ்வரர் பெருமானை பிரார்த்தனை செய்து தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் பூஜை ஆகியவை செய்து வந்ததால் அபிஷேகபுரம் எனும் இந்த ஊர் பெயர் பெற்றது.
வெள்ளை யானைக்கு சாப விமோசனம் நிவர்த்தி அடைந்தது. இதனாலயே இங்குள்ள மூலவருக்கு ஐராவதீஸ்வரர் எனும் பெயரும், இடைவிடாது அபிஷேகம் செய்ததால் அபிஷேகபுரம் என பெயர் வரவும் காரணம் ஆயிற்று. ஐராவதம் எனும் யானை பூஜை செய்ததால் ஸ்வாமிக்கு சுயம்புவாக ஐராவதீஸ்வரர் எனவும் பெயர் எழுந்தது. 12ம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழ மன்னனால் சோழ நாட்டில் உள்ளது போல கொங்கு நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் மாட கோயிலாக சிவாலயம் கட்டப்பட்டுள்ளது என்பது கல்வெட்டின் மூலமாக அறிய வருகிறது. சிவபெருமான், அம்பாள், பெருமாள் ஆகிய மூன்று தெய்வங்களின் சன்னதிகளும் ஒரே நேர்கோட்டில் இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இந்த தலத்தில் இந்திரன் முதலான தேவர்களும் ஜாதகத்தில் களத்திர ஸ்தான அதிபதியான சுக்கிர பகவான் இங்குள்ள சுயம்பு ஐராவதீஸ்வரரை வழிபட்டதாலும் இந்த தலத்தை கொங்கு மண்டல நவகிரக தலத்தில் சுக்கிரன் தலமாக ஹிந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. மேலும் இத்தலத்தில் சுக்கிரனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவனை வழிபட்டால் அனைத்து சாபங்கங்களுக்கும் விமோசனம் அளிக்கும் தலமாக விளங்குகிறது. சுக்கிரன் தலமாக உள்ளதால் திருமணத்தடை நீங்கி சுப காரியங்கள் நடைபெறுவதாக ஐதீகங்கள் உண்டு. இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில்,கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக இன்று விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், மூல மந்திர யாகம், ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜை துவங்குகிறது. நாளை (15.09.2024),கஜ பூஜை, விசேஷ சந்தி, அஷ்டபந்தனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், திருமுறை பாராயணம் சதுர்வேத பாராயணம் ஆகியவை நடைபெறுகின்றது. கும்பாபிஷேக தினமான 16ம் தேதி காலை யாத்திரா தானம், பூர்ணாஹீதி,கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்று ஸ்ரீ அபிஷேக வல்லி உடனமர் ஸ்ரீஐராவதீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜ பெருமாள் கோபுரங்கள் மற்றும் மூலஸ்தானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தலைவர் சோழா குழுமம், திருப்பணி குழு மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் அப்புகுட்டி மற்றும் அறங்காவலர் மிதுன்ராம் குழுமம் ராஜு என்கிற பழனிச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ அபிஷேகவல்லி உடனமர் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில் திருப்பணி குழு மற்றும் ஐந்து கிராம ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.