பதிவு செய்த நாள்
14
செப்
2024
11:09
அம்பாசமுத்திரம்; கல்லிடைக்குறிச்சியில், சிவதீக்கை பெரு வேள்வியில் சிவனடியார்களுக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் தீக்கை வழங்கினார். கல்லிடைக்குறிச்சி வேளாக்குறிச்சி ஆதீன ஆதி பூஜை மடத்தில் சிவதீக்கை பெரு வேள்வி நேற்று நடந்தது. கணபதி ஹோமம், தீட்ச ஹோமத்தை தொடர்ந்து, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆதி பூஜை மடத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் தியாகராஜர், சபாபதி, ஞான விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து, சிவனடியார்களுக்கு சமய, விசேட தீக்கைகளை உபதேசித்து, தீக்கை வழங்கினார். அப்போது, குரு உபதேசம் பெற்ற நீங்கள் (சிவனடியார்கள்) முறையாக விபூதி தரித்து, சிவபெருமானை ஆகம விதிப்படி வழிப்பட வேண்டுமென்றார். தொடர்ந்து, யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் தியாகராஜர், சபாபதி, ஞான விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவதீக்கை பெற்ற சிவனடியார்களுக்கு கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டு குழு சார்பில் சைவ அனுட்டான விதி கையேடு வழங்கப்பட்டது.