பதிவு செய்த நாள்
15
செப்
2024
06:09
உத்திரமேரூர்; வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரத்தில், பிரசித்தி பெற்ற மன்னேரி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை மண்டபத்துடன் கூடிய கோபுர வழிபாட்டு தளமாக்க அப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர்.
இதற்காக, இரண்டு ஆண்டுகளாக கோவிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீர் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, இன்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடு, தனலட்சுமி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மஹா தீபாராதனை மற்றும் முதற்காலை யாக பூஜைகள் நடந்தன. இன்று வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால யாகபூஜை, வேதபாராயணம், பன்னிரு திருமுறை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு கலச புறப்பாடும், 10:00 மணிக்கு கோபுரம் கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், பழையசீவரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.