பதிவு செய்த நாள்
16
செப்
2024
12:09
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூல கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அந்தகா சூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களுக்கு அனுகிரகம் செய்த ஸ்தலம். அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம். ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான புனித ஸ்தலமாக கருதப்படுகிறது, திருக்கோவிலூர், கீழையூர், வீரடானேஸ்வரர் கோவில். பழமையும், பெருமையும் மிக்க கோவில் புனரமைக்கப்பட்டு, எண்மருந்து சாற்றி, மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3:00 மணிக்கு எட்டாவது கால யாக வேள்வி, கலச பூஜை, மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி சுவாமி, அம்மன், விமான ராஜகோபுரங்கள், மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மலர் தூவி, பக்தர்களின் நமச்சிவாயா கோஷத்துடன், மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு பஞ்ச மூர்த்திகள் திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து பெரிய ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. வான வேடிக்கையுடன் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி சேர்மன் முருகன், முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், தொழிலதிபர்கள் முருகன், தியாகராஜன், நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், கோவிந்த், அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர், கீழையூர் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.