பதிவு செய்த நாள்
16
செப்
2024
12:09
வால்பாறை; வால்பாறை விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
வால்பாறை தாலுகா ஹிந்துமுன்னணி சார்பில், 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோவில்களில் , 76 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு வழிபாடு நடந்தது. நேற்று வால்பாறை நகருக்கு விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே நிறுத்தப்பட்டன. விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நடந்த பொதுக்கூட்டத்திற்கு, ஹந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். நகரத்தலைவர் சதீஷ், செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஹிந்துமுன்னணி மாநிலச்செயலாளர் அண்ணாத்துரை, மாநில அமைப்பாளர் ராஜேஸ், கோவை கோட்ட செயலாளர் பாலசந்திரன், ஆகியோர் பேசினர். தொடர்ந்து விசர்ஜன ஊர்வலத்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துவங்கிய விசர்ஜன ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்டு, காந்திசிலை, வாழைத்தோட்டம், புதிய பஸ் ஸ்டாண்டு ஸ்டேன்மோர் பிரிவு , போலீஸ் ஸ்டேஷன் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிலைகள் நேற்று மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.