பதிவு செய்த நாள்
16
செப்
2024
05:09
திருப்பூர்; மேற்குபதி, அபிஷேகபுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர், ஸ்ரீஅழகுராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது.
இந்திரனின் வெள்ளை யானை ஐராவதத்துக்கு சாப விமோசனம் அளித்த தலம் என்பதால், ஐராவதீஸ்வரர் என்ற பெயருடன், திருப்பூர் ஒன்றியம், மேற்குபதி ஊராட்சி, அபிஷேகபுரத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீஅழகராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வேதமந்திரங்கள் முழங்க பக்திப்பெருக்குடன் நடந்தது. கடந்த 8ம் தேதி முதல் கும்பாபிஷேக விழா பூஜைகள் துவங்கியது; புனித தீர்த்த ஊர்வலம், முளைப்பாலிகை ஊர்வலத்துடன், மூன்று கால வேள்வி பூஜைகள், சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள், தேவார, திருவாசக பண்ணிசை பாராயணத்துடன் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன; தொடர்ந்து, தீர்த்தக்கலசங்கள், யாகசாலையில் இருந்து புறப்படாகின. காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள், ஸ்ரீஅபிஷேகவல்லி உடமனர் ஐராவதீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பின், மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பெருஞ்சலங்கை ஆட்டம், வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை பட்டிமன்றம், திருமுறை பாராயணம் மற்றும் திவ்ய பிரபந்தம் விண்ணப்ப இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், கும்பாபிஷேக நான்கு கால பூஜைகளுக்கு வர்ணனை நிகழ்த்தினார். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளை, அபிஷேகபுரம் சண்முகம் சிவாச்சாரியார், ஐராவதீஸ்வர சிவம், நம்பியூர் மணிவண்ணன் அய்யங்கார் குழுவினர் மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை, தமிழ்நாடு நுற்பாலைகள் சங்கம் மற்றும் சோழா குழுமத்தின் தலைவர் ‘சோழா’ அப்புக்குட்டி, மிதுன்ராம் குழுமம் அறங்காவலர் ராஜூ பழனிசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.