பதிவு செய்த நாள்
19
செப்
2024
10:09
காஞ்சிபுரம்; உலக நன்மைக்காக சாதுக்கள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குரு பூர்ணிமா அன்று சாதுர்மாஸ்ய விரதத்தைதுவக்கினார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை, மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில் சந்திரமவுலீஸ்வரர் திரிகால பூஜை, பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சி, சொற்பொழிவு, கிராமப்புற திருக்கோவில் வழிபாட்டு குழு மாநாடு நடைபெற்றது. மேலும், தேசியவழக்கறிஞர்கள் சந்திப்பு, கல்வியாளர்கள் சந்திப்பு, நுால்கள் வெளியீடு, உலக நன்மைக்காக யாகங்கள்உள்ளிட்ட நிகழ்ச்சிகள்நடந்தன. சாதுர்மாஸ்ய விரதத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்து, பூரண தவ வலிமையோடு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு அருள்புரியும் விஸ்வரூப யாத்திரை நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் சதாப்தி மண்டபத்தில் இருந்து, மாலை 5:30 மணிக்கு வேத பண்டிதர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். அவருக்கு, கோலாட்டம், தேவார இன்னிசை, சிலம்பம், பழங்குடியினர் இசை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி கலைஞர்கள் வரவேற்றனர். ஓரிக்கை கூட்ரோடு சாலையில் அமைக்கப்பட்ட மேடை மற்றும் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, பல்வேறு தரப்பு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். காஞ்சிபுரம் கீரை மண்டபம், மேட்டுத்தெரு, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நிறைவு செய்தார். அங்கு, பல்வேறு கோவில்களின் பிரசாதம்வழங்கி அருளாசி வழங்கினார்.