பதிவு செய்த நாள்
21
செப்
2024
08:09
ஆந்திராவில் திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் உலக அளவில் புகழ்பெற்றது. பழனிக்கு பஞ்சாமிர்தம், சபரிமலை அரவணை பாயாசம் போல திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு இல்லாமல் ஆன்மிக பயணம் முழுமை பெறாது. இப்படி புகழ்பெற்ற திருப்பதி லட்டு வரலாறு தெரிய வேண்டும் என்றால் 300 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 1715 ஆகஸ்ட் 2ல் திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு பிரசாதமாக படைக்கும் முறை தோன்றியது. அதற்கு முன் தயிர் சாதம், சுய்யம், அப்பம், கறுப்பு உளுந்து வடை, அதிரசம், மனோகரம் எனப்படும் இனிப்பு முறுக்கு பூஜையின் போது படைக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக 1715ல் ஏழுமலையானுக்கு லட்டு படைக்கப்பட்டாலும் அது பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை.
1803 முதல் பக்தர்களுக்கு பூந்தியாக பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. ஜமீன்தார்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கப்பட்டது. 1932ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவானது. அப்போது திருப்பதி மடப்பள்ளியில் பிரசாதங்கள் செய்யும் உரிமை மிராசிகள் வசம் போனது. 1940ல் திருப்பதி பெருமாளுக்கு நித்ய கல்யாண வைபவம் நடைபெற்றது. கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதுவரை அப்படியொரு லட்டு சுவையை பக்தர்கள் ருசித்தது இல்லை. அன்று கல்யாணம் ஐயங்கார் பார்முலாவில் உருவானது அந்த லாட்டு அதன் ருசியில் மயங்கிய பக்தர்கள் இனி எப்போதும் அதே பிரசாதத்தை வழங்க வேண்டும் என தேவஸ்தானத்திடம் கோரிக்கை வைத்தனர்.
பக்தர்கள் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம் 1940 முதல் பூந்திக்கு பதில் லட்டை பிரசாதமாக வழங்க துவங்கியது. 1996 வரை திருப்பதி லட்டு ருசிக்கு புது பார்முலா கண்டுபிடித்த கல்யாணம் ஐயங்கார் வாரிசுகள் லட்டு தயாரித்து வந்தனர். பிறகு தேவஸ்தானமே லட்டுகளை தயாரிக்கத் தொடங்கியது. இன்று நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் அளவுக்கு நவீன கூடம் திருப்பதியில் உருவாகிவிட்டது. ஒரு நாளில் முதலில் தயாரிக்கப்படும் லட்டு பெருமாளுக்கு வைத்து படைக்கப்படுகிறது. அதன் பிறகுதான் பக்தர்களுக்கு அது விநியோகம் செய்யப்படும். இப்போதைக்கு திருப்பதி தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கிறது. லட்டு தயாரிக்க 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். 3 வகைகளில் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. முதல் தரமானது ஆஸ்தான லட்டு. விசேஷ நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. 750 கிராம் எடை கொண்டது. மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ சேர்த்து தயாரிக்கப்படுகிறது. அடுத்தது கல்யாண உற்சவ லட்டு. இது கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. 750 கிராம் எடை கொண்டது. மூன்றாவது புரோகிதம் லட்டு. மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. 175 கிராம் எடை கொண்டது. பக்தர்களுக்கு அதிக அளவில் விநியோகம் செய்யப்படுவது இந்த லட்டு தான். திருப்பதி லட்டுக்கு 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இருந்தாலும் இன்றளவும் தரம் குறையாமல் பக்தர்களுக்கு கைகளுக்கு போகிறது. இன்று ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினாலும் திருப்பதி லட்டுக்கு உண்டான மவுசு, மரியாதை, வரலாற்று பின்னணியை யாராலும் மாற்ற முடியாது என்பதே உண்மை.