திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப மூன்றாம் நாள் விழாவில், சிம்ம வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நடந்தது. பகலில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இரவு, 10 மணிக்கு மேல் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வாணை சமேதர சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர். கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு எதிரில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் செய்து அண்ணாமலையாருக்கு அபிஷேக வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.