பதிவு செய்த நாள்
01
அக்
2024
03:10
பல்லடம்; பல்லடம் அருகே, விநாயகர் கோவில் உண்டியல் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் அடுத்த, கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டை பகுதியில், கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. காரணம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். தனியாருக்கு சொந்தமான கோவிலின் உட்புறம் மற்றும் வெளியே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. முன்தினம், அன்றாட பூஜைகள் முடிந்து வழக்கம்போல் இரவு கோவில் நடை சாற்றப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை கோவில் திறந்தபோது, கோவிலுக்கு வழி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் மாயமானது. சிமெண்ட் பூச்சுடன் சேர்த்து உண்டியலும் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து சாவகாசமாக மது அருந்திவிட்டு, அதன் பிறகு உண்டியலை திருடி சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. நவராத்திரி விழா துவங்க உள்ள நிலையில், கோவில் அருகே, சூலூரைச் சேர்ந்த வட மாநில குடும்பத்தினர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விநாயகர் கோவில் உண்டியல் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.