பதிவு செய்த நாள்
01
அக்
2024
03:10
செஞ்சி; செஞ்சி அருகே 1200 ஆண்டு பழமையான தவ்வை சிற்பத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் செங்குட்டுவன், செஞ்சி வாசுதேவன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அங்குள்ள பச்சையம்மன் கோவிலில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது: அப்பம்பட்டு ஏரிக்கரையில் பச்சையம்மன் கோவிலில் காளி சிலை உள்ளது. இந்த சிற்பத்தை ஆய்வு செய்ததில், சிற்பம் மூத்ததேவி என அழைக்கப்படும் தவ்வை சிற்பம் என தெரியவந்தது. இந்த சிற்பத்தை வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கின்றனர். திண்டின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்ட நிலையில், வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக்குடத்தின் மீதும் வைத்திருப்பது போன்று உள்ளது. சிற்கரண்ட மகுடம், குழையும் காதணிகள் மற்றும் கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும் இடையில் மேகலையுடனும் காணப்படுகிறது. வலது பக்கத்தில் காக்கையும் இடது பக்கத்தில் துடைப்பமும் உள்ளன. தவ்வையின் வலது புறத்தில் மகன் மாந்தன் வலது காலை தொங்கவிட்டு இடது காலை குத்திட்டும், இடது புறத்தில் மகள் மாந்தி வலது காலை தொங்க விட்டு, இடது காலை மடக்கியும் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றனர். வலது காலடிக்குக் கீழே பெண் அடியவர் ஒருவர் அமர்ந்திருப்பது அரியதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். இந்தத் தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. இது 1200 ஆண்டுகள் பழமையானது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.