பதிவு செய்த நாள்
04
அக்
2024
11:10
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இத்தளத்தில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டியவை வேண்டிய மாத்திரத்திலேயே கிடைக்கும் எனவும், குழந்தைகள் ஞானம் பெறுவர் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து 6 மணியிலிருந்து 7 மணிக்குள் கனிகா லக்னத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பிரம்மோற்சவ கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 7ம் தேதி கருட சேவையும், 10ம் தேதி திருக்கல்யாணமும், 12ஆம் தேதி தேர், தீர்த்த வாரியும், 13ஆம் தேதி கொடி இறக்கமும், 14ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் தலைமையிலானோர் செய்துள்ளனர்.