பதிவு செய்த நாள்
04
அக்
2024
11:10
செங்கல்பட்டு; செங்கல்பட்டில், நவராத்திரி விழாவையொட்டி, நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, தசரா விழா நடைபெறுகிறது. இவ்விழா, நேற்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில், தினமும் அம்மனுக்கு வெவ்வேறு மலர் அலங்கரம் செய்து வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும், ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்வர். இதில், 9ம் நாள் சரஸ்வதி போன்று அலங்காரம் செய்யப்படும். வரும் 12ம் தேதி, 10ம் நாள் விழாவில், விஜயதசமியையொட்டி, அம்மன் சிலைகளும், துர்கா வேடமிட்டு, வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.
இரவு 10:00 மணிக்கு, அனுமந்தபுத்தேரி அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில், சூரசம்ஹாரத்தின் போது, வன்னி மரத்தில் அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவிற்கு, செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர், சுவாமி தரிசனம் செய்வர். விழாவையொட்டி, சிறிய, பெரிய ராட்டினங்கள், பொழுபோக்கு விளையாட்டு, வீட்டு உபயோக பொருட்கள், உணவு கடைகள் அமைக்கப்பட்டன. இதில், ராட்டினம் இயக்குவதற்கு அனுமதி கிடைக்காததால், அவை அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள், குழந்தைகள் ஏமாற்றத்துடன் சென்றனர். செங்கல்பட்டு நகர போலீசார், தினமும் 100 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.