மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது, இதனையோட்டி சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொலு மண்டபத்தில் சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவபெருமானின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, சங்க பலகை அளித்தது, கால் மாறி ஆடிய படலம், குண்டோதரருக்கு அன்னமிடல், தாகம் தீர்த்தல், மீனாட்சி பிள்ளை தமிழ், மீனாட்சி ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2 ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்திரி முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் நாள் கைகளில் கரும்பு, தாமரை மலர் ஏந்தி ஊஞ்சல்_அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று 3ம் நாள் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 4ம் நாள்– 06.10.2024 விறகு விற்ற லீலை, 5ம் நாள்– 07.10.2024- சுந்தரர் அவதாரம், 6ம் நாள்– 08.10.2024- விநாயகர் ஜனனம், 7ம் நாள்– 09.10.2024 எல்லாம் வல்ல சித்தர் கோலம், 8ம் நாள் – 10.10.2024 மகிஷாசுரமர்த்தினி கோலம், 9ம் நாள்– 11.10.2024- சிவபூஜை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்க உள்ளார்.