பதிவு செய்த நாள்
05
அக்
2024
11:10
உடுமலை; உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியின் வரலாற்று அடையாளமாக இருந்த கோவில், பல்வேறு காரணங்களால், பராமரிப்பின்றி பொலிவிழக்க துவங்கியது.
சில ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் குழுவாக ஒருங்கிணைந்து, கோவில் பராமரிப்பு பணிகளை துவக்கினர். மேற்கூரையில் இருந்த செடிகள் அகற்றப்பட்டு, விரிசல்கள் சீராக்கப்பட்டது. தரைத்தளம் மற்றும் துாண்களும் பராமரிக்கப்பட்டு, சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். வளாகத்திலுள்ள காலியிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, கருடகம்பத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டது. இவ்வாறு, பொலிவிழந்து காணப்பட்ட கோவில் படிப்படியாக புதுப்பொலிவு பெற்றது. இருப்பினும், ராஜகோபுரம் மற்றும் கோபுரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. ஹிந்து அறநிலையத்துறையினர் கோபுரத்தை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வந்தனர். பழங்கால கோவில் என்பதால், திருப்பணி மேற்கொள்ள தொல்லியல்துறை வழிகாட்டுதல் பெற வேண்டும் என, ஹிந்து அறநிலையத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதி பக்தர்கள் சார்பில், கோவில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு, ஹிந்து அறநிலையத்துறைக்கு தொடர்ந்து மனு அனுப்பினர். தற்போது, திருப்பணிகள் மேற்கொள்ள, பல்வேறு வழிகாட்டுதல்களுடன் ஹிந்து அறநிலையத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, திருப்பணிகள் தொடங்கும் முன் கோவிலில் உள்ள விமானங்கள், சுதை சிற்பங்கள் மற்றும் சால கோபுரத்தை சீரமைத்து, வர்ணம் தீட்டும் பணியை மேற்கொள்ள பணியாணை வழங்கப்படுகிறது. இப்பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிதிகளுக்குட்பட்டு மேற்கொள்ள வேண்டும். தொல்லியல்துறை மற்றும் திருப்பணி பரிசீலனை குழுக்களின் பரிந்துரைப்படியே அனைத்து பணிகளும் நடைபெற வேண்டும். பொறியியல் பிரிவினர் மற்றும் ஸ்தபதியின் மேற்பார்வையில் பணிகள் நடக்கும். இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு, மூவர் கண்டியம்மன் கோவில் கோபுரத்தை புதுப்பிக்க ஹிந்து அறநிலையத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில், அனைத்து பணிகளையும் மேற்கொண்டு கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.