பதிவு செய்த நாள்
07
அக்
2024
04:10
உடுமலை; கேட்பவர் மற்றும் பாடுபவர் என இருவருக்கும் பயன்தர கூடியது பதிகங்கள்; அவற்றை கற்று போற்றி பாதுகாக்க வேண்டும் என, கரூர் குமாரசுவாமிநாதன் ஓதுவார் பேசினார்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றத்தின், 61ம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, அருள் தரும் அற்புத பதிகங்கள் திருமுறை நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை விழா மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். கார்த்திகை விழா மன்ற காப்பாளர் ரவீந்திரன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், பழநி சண்முகசுந்தர தேசிகர், வெங்கடேசன் ஓதுவார் கரூர் குமாரசுவாமிநாதன் ஓதுவார், நெய்வேலி சிவராஜபதி ஓதுவார் மற்றும் குழுவினர், அற்புத திருப்பதிகங்களை பாடினார்கள். கரூர் குமாரசுவாமிநாதன் பேசியதாவது: தமிழும்- தமிழிசையும் ஐந்தாம் நூற்றாண்டில், காரைக்கால் அம்மையாரால், பன்னிசையாய் பாடும் மரபு தழைத்தது. தொடர்ந்து, ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என மும்மூர்த்திகளையும் இறையருள் ஆட்கொண்டு திருமுறைகள் மெருகேறியது. நாவுக்கரசரால் திரு அதிகையில், ‘உன் நாவுக்கு அரசன்,’ என திருநாவுக்கரசருக்கு பெருமை சூட்டி, பிற்காலத்தில் அருணகிரிநாதரால் அலங்கரிக்கப்பட்டது தேவார திருமுறைகள் ஆகும். சுமார் 1,500 ஆண்டுகளாக சத்திய வாக்காக நிலை பெற்று, இன்றளவும் சிவனடியார்களால் தேவார திருவாசக திருமுறைகள் கொண்டாடப்படுகிறது. திருமுறைகள், தமிழுக்கு மகுடமாக திகழ்கிறது. ‘நாளும் பூ கொண்டு நீர் சுமக்கும் நின்னடியார் இடர்களைவாய்,’ என ஞானசம்பந்தர் பாடுகிறார். பதிகங்கள் யாவும் மருந்து; கேட்பவர், பாடுபவர் இருவருக்கும் பயன்தரவல்லது. உலகியல் நலன் வேண்டி குழந்தை பேரு துவங்கி, துன்பமில்லா மரணத்தையும், மரணத்தை தாண்டி இறைவனின் திருவடி நிழலில் நிலைப்படும் பேரும் வழங்கும் அற்புதம் நிகழ்த்தவல்லது பன்னிசை. நாம் செய்யவேண்டியது, இன்னும் பல்லாயிரம் ஆண்டு பன்னிசையை முறையாக கற்று காத்து பக்தியுடன் ஓதி தமிழையும் வாழ்விப்போம். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.