பதிவு செய்த நாள்
10
அக்
2024
07:10
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள். இன்று துர்காஷ்டமி. எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமி. அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள்.
நவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி நரசிம்மி வடிவில் இருப்பாள். அவள் ரத்த பீஜன் தேவியால் வதம் செய்யப்பட்ட தினமாகும். இதனால் அதற்கு ஏற்ப அலங்காரம் செய்வர். கரும்பு வில் பிடித்திருக்க, சுற்றிலும் அணிமா உள்ளிட்ட அஷ்ட சக்திகள் எழுந்திருக்க, கருணையுடன் தேவி இருக்கும் வகையில் கோவில்களில் அம்மனை அலங்காரம் செய்து வைத்திருப்பர். இந்த அலங்காரத்தில் அன்னையை நாம் வழிபட்டால், வேண்டிய எல்லா வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.நவராத்திரியின் எட்டாம் நாளை மஹா அஷ்டமி எனக் குறிப்பிடுவது வழக்கம். இன்று தான், துர்காதேவி அவதரித்த நாளாகும். ஹதுர்க்கம் என்றால் அகழி என்று பொருள். நம்மிடம் சத்துருக்களை நெருங்க விடாமல், அகழி போல் நின்று காப்பவள்.ஸ்ரீஆதி சங்கரர் அளித்த சவுந்தர்ய லஹரியில் 41வது பாடலைப் பாட வேண்டும்; இந்த வழிபாட்டால் எதிரிகளால் துன்பம் வராமல் காப்பாற்றப்படுவர்.இன்று மாலையில் துர்கையாக பாவித்து அம்பிகையை வணங்கலாம். கோயில்களில் துர்கையை எலுமிச்சை தீபமேற்றி வழிபட துர்கையின் அருள் அரண்போல் காக்கும்.