சரஸ்வதி பூஜை; ஞான பீடமான கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2024 11:10
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் எனும் தமிழ் புலவர் இங்கு வாழ்ந்து இந்த கோயிலில் வழிபட்டதால் இந்த ஊருக்கு கூத்தனூர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இங்கு அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கூத்தனூர் சரஸ்வதி தலம் "ஞான பீடம் என்றும் "தெட்சிண திரிவேணி சங்கமம் என்றும் புகழ்பெற்றது. மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். தென் இந்தியாவிலேயே கல்வி தெய்வமான சரஸ்வதி அம்மனுக்கான தனி கோயில் இது தான். கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி மனதார வணங்குபவருக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவிய நாயகனாகவும் திகழ்வார். சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.