பதிவு செய்த நாள்
14
அக்
2024
05:10
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனம், புண்யாவசனம், கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால், ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில், மேள, தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு, ஆஸ்தானம் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, உச்ச கால பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வேத பாராயணம் சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நவராத்திரி வைபவத்தின் நிறைவு விழாவை அடுத்து, அரங்கநாதப் பெருமாள் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவேட்டை மைதானத்திற்கு சென்றார். அங்கு அம்பு போடும் வைபவம் நடைபெற்றது. பின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தார். அறங்காவலர் குழு தலைவர் தேவஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன், கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.