நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது. ஆடல் போலவே அனைத்துயிர் வாழ்வும் மெல்லிய அசைவில் தொடங்கி நளினமாய் நகர்ந்து வேகமாய் ஆடி, முடிவிலே சோர்ந்து ஈசன் திருவடியிலே சேரும். இதேயே இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் நடனங்கள் அகிலத்திற்கு உணர்த்துகிறது. ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பவுர்ணமிக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி திதி சிறப்பானது. சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம் தரிசிக்க தடைகளெல்லாம் விலகும். நடராஜரை வழிபடுவோர் சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள். இன்று நலம் யாவும் தரும் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல் சிறப்பு. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டு சிறந்த பலனை பெறுவோம்!