பதிவு செய்த நாள்
18
அக்
2024
10:10
ஐப்பசி மாதப்பிறப்பு தமிழ் மாதங்களை ஆறு, ஆறாக பிரித்து, சித்திரை மற்றும் ஐப்பசிக்கு, விஷு என்ற அடைமொழி கொடுத்து, இவ்விரு மாதங்களை புண்ணிய நீராடலுக்குரிய காலங்களாக கருதுகின்றனர், நம் முன்னோர். சித்திரையில் வெப்பம்; ஐப்பசியில் குளிர். இந்த இரண்டு காலங்களும் சம அளவில் நன்மை தருவதாக அமைய வேண்டும் என்பதற்காகவே, விஷு எனும் விழாவை கொண்டாடுகின்றனர். ஐப்பசியை, துலாம் (தராசு) மாதம் என்பர். இந்த மாதத்தில், துலாம் ராசியில் நுழைகிறார், சூரிய பகவான்.
ஐப்பசி மாதம் அடை மழைக் காலம்; அப்போது, நதிகள் பெருக்கெடுத்து ஓடும். சித்திரையில் அவ்வாறு இருக்காது. அதனால், இரண்டு காலத்திலும், நதிகளில், போதுமான தண்ணீர் வேண்டும் என பிரார்த்திக்கும் இயற்கை வழிபாடாகவே, சித்திரை விஷுவும், ஐப்பசி விஷுவும் அமைந்துள்ளன. விஷு என்ற சொல்லுக்கு, புதியது, காட்சி என்றெல்லாம் பொருள் உண்டு. தவமுனிவரான அகத்தியர், தமிழகத்துக்கு தந்த, இரு பெரும் கொடைகள் காவிரியும், தாமிரபரணியும்! அவை, என்றும் புதிதாக, அவர் உருவாக்கிய காலத்தை போல், பெருகி ஓட வேண்டும் என்பதாலேயே, விஷு விழா கொண்டாடப்படுகிறது.
தாமிரபரணி கரையிலுள்ள பாபநாசத்தில், விஷு சிறப்பாகக் கொண்டாடப்படும். சித்திரை விஷுவன்று, திருமணக் கோலத்தில், அகத்தியருக்கு காட்சி தருவர், சிவனும், பார்வதியும். ஐப்பசி விஷுவன்று, இங்கு தீர்த்த வாரி நடக்கும். நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற விழாக்களை ஏற்படுத்தினர், நம் முன்னோர். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்வர். சிவன் கோவில் பாதுகாவலராக இருப்பதால், நந்திக்கு கர்வம் ஏற்பட்டது. அதன் கர்வத்தை போக்கினார், சிவன். இதனால், இங்கு ஓடும் காவிரியின் நடுவில் இருக்கிறது, நந்தி. இந்த தீர்த்தத்தை, இடப தீர்த்தம் என்பர். இடபம் என்றால், காளை அல்லது நந்தி; ஐப்பசி மாதத்தின், 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளும், இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாட்களில், தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். கங்கை நதி, ஐப்பசி மாத அமாவாசையன்று, இங்கு வந்து நீராடி, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இந்நாளில், காவிரியில் நீராடினால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி துலா ஸ்நானத்திற்காக, மயிலாடுதுறை வந்தனர், நாதசர்மா -அனவித்யாம்பிகை தம்பதியர். அவர்கள் வருவதற்குள், 30ம் நாட்கள் ஸ்நானம், முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன், இங்குள்ள மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சென்று வணங்கி, அவ்வூரிலேயே தங்கினர். அன்றிரவு, நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், கார்த்திகை மாதம் முதல் நாள் அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்பாக நீராடினாலும் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே, மறுநாள், காவிரியில் மூழ்கி, பாவம் நீங்கப் பெற்றனர் அத்தம்பதியினர். பின், அக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம், மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில், அனவித்யாம்பிகை என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு, சிவப்பு சேலை கட்டுகின்றனர். ஐப்பசி விஷுவன்று, உங்கள் ஊரிலுள்ள நீர் நிலைகளை பாதுகாக்க, உறுதியெடுங்கள்; கடவுளின் அன்புக்கு பாத்திரமாகுங்கள்!