பதிவு செய்த நாள்
23
நவ
2012
10:11
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், "மரண பயம் நீங்க, மர்மக் காய்ச்சல் ஒழிய, "ம்ருத்யுஞ்ஜெய, தன்வந்திரி ஹோமம், நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு நடத்தப்பட்டது. ஹோமத்திற்கு ஏற்பாடு செய்த, மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சின்மயா சோமசுந்தரம் கூறியதாவது: ஐந்து நாட்களுக்கு முன், மருத்துவமனை வந்த போது, "மர்மக் காய்ச்சல், "டெங்குவால் தொடர்ந்து உயிர் பலி ஏற்படுவதால், யாகம் செய்ய முடியுமா என, டீன் மோகன் கேட்டார். மதுரை மீனாட்சி கோவில் இணை கமிஷனர் ஜெயராமனிடம் இதைத் தெரிவித்தபோது, சுவாமி சன்னதி குருக்கள் செந்திலை யாகம் நடத்த அனுப்பினார். செந்தில் மற்றும் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு, "ம்ருத்யுஞ்ஜெய (எமனை வெல்லும் யாகம்), தன்வந்திரி(மருத்துவக் கடவுள்) ஹோமம் செய்தோம். தொடர்ந்து மேலூரில் நடக்கும் காய்ச்சல் இறப்புக்காக, சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்த உள்ளோம், என்றார். மருத்துவமனை மனநல வார்டு அருகில் உள்ள வனபத்திர காளியம்மன் கோவிலில் யாகம் முடிந்த பின் டெங்கு நோயாளிகளின் வார்டுகளைச் சுற்றி அபிஷேக நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. பாரத் ஹெரிடேஜ், கோவர்த்தன் அறக்கட்டளை, வி.எச்.பி., இந்து மாணவர் சங்கம் இணைந்து நடத்தின.