பதிவு செய்த நாள்
23
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தீபத்திருவிழாவையொட்டி, லாட்ஜ்களில், வாடகையை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். இதனால், பக்தர்கள் வாடகை வீடுகளை தேடி அலைகின்றனர். திருவண்ணாமலையில், 150க்கும் மேற்பட்ட, லாட்ஜ்கள் உள்ளன. லாட்ஜ்களில் உள்ள வசதி அடிப்படையில், கட்டணம் நிர்ணயம் செய்து வருகின்றனர். இதில், சாதாரண நாளில் இரண்டு படுக்கை வசதி கொண்ட அறைக்கு, 150 முதல் நாள் ஒன்றுக்கு, 750 ரூபாய் வரை, வாடகை வசூல் செய்கின்றனர். மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட லாட்ஜ்களில், 4,000 முதல், 7,000 வரை, ஏற்கனவே வாடகை வசூல் செய்து வந்தனர். பவுர்ணமி நாள் மற்றும் தீபத்திருவிழா நாளில் மட்டுமே, அனைத்து லாட்ஜ்களிலும், அனைத்து ரூம்களும் நிரம்பும். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பலர் தங்குவதற்கு லாட்ஜ்களில் அறை கிடைக்காமல் அவதிப்படுவது, தொடர்கதையாகும்.
தீப திரு நாளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், கார், ஆட்டோ போன்றவை, நகரினுள் செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது, அதனால், கோவில் அருகில் உள்ள லாட்ஜ்களில், மற்ற பகுதி லாட்ஜ்களில் நிர்ணயித்துள்ள வாடகையை விட, கூடுதல் வாடகை வசூலிக்கப்படும். இந்தாண்டு, தீபத்திருவிழாவுக்காக, எப்போதும் இல்லாத அளவுக்கு அறைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு, 150 ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்ட லாட்ஜ்களில், இரண்டு நாட்களுக்கு சேர்த்து தான் வாடகைக்கு வசூலிப்போம் என்று கூறி, வாடகையையும் அதிகரித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு, 3,500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கின்றனர். சில லாட்ஜ்களில் தினசரி, 4,000 ரூபாய் வரை, மூன்று நாட்களுக்கு மொத்தமாக, 12 ஆயிரம் வாடகை வசூல் செய்கின்றனர். முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என, அனைவரும் போட்டி போட்டு கொண்டு, அறைகளை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். பக்தர்கள், தீப திருவிழாவின் போது, தங்க, நகரில் காலியாக உள்ள வீடுகளை தேடி அலைகின்றனர்.
அந்த வீட்டுக்கு ஒரு மாத வாடகையாக கொடுக்கப்படும் தொகையை, தீப திருவிழா அன்று, ஒருநாளுக்கு மட்டும் வாடகை கொடுப்பதற்கு தயாராக உள்ளனர். அப்படி கொடுத்தாலும் வீடு கிடைக்கவில்லை.கட்டண உயர்வு குறித்து, லாட்ஜ் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: ஆண்டு முழுவதும் தொழிலை நஷ்டத்தில் செய்து வருகிறோம். பவுர்ணமி நாள் மற்றும் தீப திருவிழா நாளில் மட்டும், அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்படும். மற்ற நாட்களில் காலியாகவே இருக்கும். தீபத்திருவிழா நாளில், போலீசார், வருவாய்த்துறை, வருமானவரித் துறை, தீயணைப்பு துறை, நகராட்சி நிர்வாகத்தினர், பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் அறை கேட்பர். அவர்களுக்கு ஒதுக்கப்படும் அறை இலவசமானவை. அவர்களுக்கு கொடுக்கப்பட்டு, மீதமுள்ள அறைகளில் மட்டுமே, நாங்கள் வாடகை வசூல் செய்ய முடியும். எனவே, அந்த அறையின் வாடகையும் சேர்த்து, வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், பல மடங்கு கட்டணம் உயர்த்தியுள்ளோம்.இவ்வாறு, கூறினர். திருவண்ணாமலை, பக்தர்களின் சுற்றுலா கேந்திரமாக மாறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதற்கான அடிப்படை வசதியான தங்குமிட வசதி மற்றும் போக்குவரத்து வசதி தொடர்ந்து, முன்னேற்றமின்றி இருக்கிறது. சுற்றுலாத் தலங்களுக்கு உள்ள தனி அந்தஸ்தை விட, அதிக அந்தஸ்து இங்கே கிடைக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இங்கே விழாக்காலத்தில் வரும் பக்தர்கள், அதிக பிரச்னையின்றி வந்து போக ,உரிய நடைமுறைகளை ஏற்படுத்தாதவரை விடிவு என்பது சந்தேகமே.