அமெரிக்காவில் ஏலத்திற்கு வரும் சோழர் கால சுவாமி சிலைகள்; மீட்க கோரிக்கை
பதிவு செய்த நாள்
18
அக் 2024 10:10
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கோவில் தேவராயனபேட்டையில் உள்ள சுகுந்தகுந்தாளம்மன் உடனாய மத்ஸபுரீஸ்வரர் கோவிலில், ஜூன் 14ல் கோவிலின் தெற்கு மடவிளாகம், பூமிக்கடியில் இருந்து, 14 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை மீண்டும் இந்த கோவிலிலேயே வழிபாட்டிற்கு வைக்க வேண்டும்; இக்கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதன திருக்கோவிலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்களுடன் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், அக்கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் அம்மன் சன்னிதியில் கோரிக்கை மனுக்களை வைத்து வழிபட்டார். பொன்மாணிக்கவேல் கூறியதாவது: பராந்தக சோழனால் கட்டப்பட்ட 1063 ஆண்டுகள் பழமையான மத்ஸபுரீஸ்வரர் கோவிலில் ஏராளமான தெய்வ திருமேனிகள் வழங்கப்பட்டுள்ளன. கி.பி., 950 – 969ம் ஆண்டுகளுக்குள் செம்பியன் மாதேவி என்ற பெண் சிவனடிகள் காலத்தில் தான், தெய்வ திருமேனிகள் செய்யப்பட்டுள்ளன. மத்ஸபுரீஸ்வரர் சுவாமி கருவறையில் இருந்து இறைவியான போக சக்தி அம்மனின் பஞ்லோக சிலை, 1974-ம் ஆண்டில் மாயமானது. இச்சிலை, தற்போது நியூயார்க் நகரத்தில் உள்ள மேன்ஹட்டன் சோதெபி தொல்பொருள் ஏல கூடத்தில் உள்ளது. இந்த சிலையை தற்போது ஏலத்திற்கு விடத் தயாராக இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏலத்தில் வசதி படைத்தவர்கள் வாங்கிச் சென்று விடுவர். இது தொடர்பாக எம்.எல்.ஏ., – எம்.பி., மத்திய கலாசாரத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மேலும், இந்த சிலையை மீட்டு திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் கைதி போல வைக்காமல் கோவிலிலேயே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி எம்.எல்.ஏ., – எம்.பி., மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள், தலைமை செயலர் உள்ளிட்டோர் ஒரு குழுவாக, புதுடில்லிக்கு விரைவில் சென்று பிரதமரை சந்தித்து, அந்த சிலை ஏலத்தை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இச்சிலை தொடர்பாக, 30 ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையில் சைவர்கள் மிகுந்த மென்மையானவர்கள் என்பதால் தான், சில நாட்களுக்கு முன் கோவிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எங்கே உள்ளன என, அதிகாரிகள கூற மறுக்கின்றனர். இது தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் பதில் கூறவில்லை என்றால், அவரை கோவிலுக்கு உள்ளே விடக் கூடாது. கோவில் வருமானத்தில் ஊதியம் பெறும் அவர், 14 சிலைகள் குறித்து கிராம மக்களிடம் தெரிவித்து, சிலைகளை கோவிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, 2012ம் ஆண்டு வந்த பிறகு, 2622 சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு எட்டு சிலைகள் தொடர்பாக நெருக்கடி கொடுத்து புகார் அளித்தேன். மாவட்ட எஸ்.பி.,க்கள் எப்.ஐ.ஆர்., போடுவதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.
|