பதிவு செய்த நாள்
28
அக்
2024
12:10
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்கு, 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணி நடக்கிறது.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில், 48.36 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி இரண்டு தளங்களுடன், 99,925 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதிகளுடன், 100 எண்ணிக்கையில் இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என, 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன. ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், டிரைவர்கள் ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம், லிப்ட் வசதி என, அனைத்து வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கும் விடுதியை அக்., 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சில் திறந்து வைத்தார். அன்றைய தினமே பக்தர்கள் பயன்பாட்டிற்காக முன்பதிவு துவங்கும் என, அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை பக்தர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பெயரளவுக்கு, 20 குடில்கள் மட்டும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்வதிலும், யார் நிர்வாகம் செய்வது என்பதிலும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சுற்றுலாத்துறை, அறநிலையத் துறை அல்லது கோயில் நிர்வாகம் என, மூன்று துறைகளில் யார் நிர்வாகம் செய்வது என, இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. கோயில் அருகிலேயே சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல் இருப்பதால், அவர்களே பக்தர்கள் தங்கும் விடுதியை நிர்வாகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் கட்டுபாட்டில் இருந்தால், பக்தர்களுக்கு குறைவான கட்டத்தில் அறைகள் கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் தங்கும் விடுதியை நிர்வாகம் செய்தால் மட்டுமே பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கந்தசஷ்டி விழா நவ., 2ம் தேதி துவங்க உள்ள நிலையில், ஏராளமானோர் தனியார் லாட்ஜ்களில் அறை முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைந்து நல்ல முடிவை எடுக்குமா என, முருக பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகளோ மவுனம் காத்து வருகின்றனர்.
20 குடில்களுக்கு மட்டுமே அனுமதி; திருச்செந்துார் கோயிலில் புதியதாக திறக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் என அழைக்கப்படும் பக்தர்கள் தங்கும் விடுதியில் முதல்கட்டமாக, 20 காட்டேஜ்களில் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த குடில்களுக்கு 24 மணி நேர வாடகையாக, 2,000 ரூபாயும், அட்வான்ஸ் தொகை, 2,000 ரூபாய் என மொத்தம், 4,000 ரூபாய் நேரடி பதிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அறையை காலி செய்து செல்லும் போது அட்வான்ஸ் தொகை திருப்பி வழங்கப்படும். விடுதியில் ஏசி வசதி, டிவி வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விடுதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், பலர் ஏமாற்றமடையும் நிலை உள்ளது. விரைவில் அனைத்து அறைகளையும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, கோரிக்கை எழுந்துள்ளது.
சுற்றுலாத்துறை வேண்டாமே! ஆன்மிக தலமான திருச்செந்துாருக்கு வருவோர் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் என்பதால், சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் தங்கும் விடுதி சென்றால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகமே பக்தர்கள் தங்கும் விடுதியை கவனித்தால், 200 ரூபாய்க்கு கூட அறை எடுத்து தங்கக் கூடிய நிலை ஏற்படும். சுற்றுலாத்துறை 2 பேர் தங்குவதற்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் அபாயம் உள்ளது.அதே போல, தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், ராமேஸ்வரத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் விடுதி முழு வருமானமும் கோவிலுக்கு வழங்கப்பட்டுவிடும். ஆனால், ராமேஸ்வரத்தில் சுற்றுலாத்துறை நிர்வாக செல்வு, ஊழியர் செலவு போக லாபத்தில் 50 சதவீதம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் மட்டுமே கோவிலுக்கு வழங்கப்படுகிறது. இதே நிலை திருச்செந்துாரில் நீடித்தால், 48.36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விடுதிக்கு ஆண்டுக்கு சொற்ப தொகையை கோவில் நிர்வாகத்துக்கு கிடைக்கும். அதை வைத்து கோவிலில் எந்த பணிகளையும் செய்ய முடியாது. அறநிலையத்துறை, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு குறைவான கட்டணத்தில் அறைகள் கிடைக்கும். முதல்வர் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.