பதிவு செய்த நாள்
24
நவ
2012
10:11
ஒரு வாழைத் தோப்பு. அது மொத்தத்தையும் அனுபவிக்க வேண்டியவன் அங்கே உட்கார்ந்திருக்கிறான். வாழைப்பழம் எதிரிலே இருக்கிறது. ஆனால், அதை அனுபவிப்பானா என்றால் தெரியாது! காரணம், அதை அனுபவிக்க பகவான் யாரை நியமித்திருக்கிறானோ! ஒருத்தர் நம்மிடம் அரை டஜன் வாழைப்பழத்தை தந்து, ""நீங்களே சாப்பிட வேண்டும், என்று ரொம்ப ஜாக்கிரதையாக தருகிறார். உபன்யாசம் முடித்தவுடன், எதிரே வருகிற அந்த மகானைப் பார்க்கிறோம். அவர் கையில் பழங்களைக் கொடுக்க வேண்டுமென தோன்றுகிறது, கொடுத்து விடுகிறோம். பகவான் யாரை வரித்திருக்கிறான்! இந்த வாழைப்பழத்துக்கு இவர் தான் அதிகாரி என்று அவன் முன்பே நியமித்து விட்டான். நாம், ஒன்றைச் செய்ய வேண்டும் என்று உத்தேசித்தாலும், இன்னொன்றை பகவான் உத்தேசித்தான் என்றால், அதுதான் நடக்கும். பகவான் ஏற்காத கைங்கர்யத்தை ஆயிரம் நாம் பண்ணினாலும், அவன் ஒத்துக் கொள்ளவோ, ஏற்கவோ மாட்டான். எந்த செயல் அவனை சந்தோஷம் அடையச் செய்யுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும். பகவானுடைய திருநாமத்தை எல்லாரும்கூடியிருந்து உள்ளம் குளிர சொல்கிற போதுஏற்படுகிற ஆனந்தம் வேறெதிலும் இல்லை.இதை வேதமே ஒப்புக்கொள்கிறது. "விஷ்ணு என்று சொல்கிற போது ஏற்படுகிற ஆனந்தம் வேறெதிலும் இல்லை என்கிறது வேதம். அவனுடைய திருநாமங்களைச் சொல்வதே ஒருவித வைபவம் தான். இறைவனிடத்தில் ஒரு பாபமும் கிடையாது என்று நீ நினைத்தாலே போதும், உன்னிடத்தில் இருக்கிற பாபக்குவியலால் ஏதும் செய்ய முடியாது. உனக்குள்ளே பயம் ஏற்பட்டால், பிரகலாதன் சொன்னதை நினை. ""உன்னை இவ்வளவு மிரட்டுகிறேனே, உனக்கு பயமில்லையா? இவ்வளவு பண்ணுகிறேனே..துளிக்கூட அச்சமில்லையா? என்ற தந்தை இரண்யனிடம், ""நான் எதற்காகப் பயப்பட வேண்டும்? பயத்துக்கே பயமானவன் எனக்குள்ளே இருக்கிற போது, நான் யாரிடத்திலே பயப்பட வேண்டும்? என்று திருப்பிக் கேட்டான். உங்களை யார் மிரட்டினாலும், நீங்களும் இப்படியே நினையுங்கள். பயம் போய்விடும். ராமனிடத்தில் வேலைக்காரனாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் தியாக பிரும்மம். அந்தக் கைங்கரியம் மிகவும் சிறப்பானது. இது இளமையிலேயே லட்சுமணனுக்கு வாய்த்தது. பகவானுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள் புதிதாக, வாசனையுள்ளதாக இருக்க வேண்டும். வாசனை இல்லாத புஷ்பத்தை அவனது திருவடியில் அர்ச்சனை பண்ணக்கூடாது. வாசனைப் பூக்களையும் அவன் முகத்தில், கண்ணில், உடலில் போடக்கூடாது. திருவடியில் சேர்க்க வேண்டும். பூவை இரண்டு விரல்களால் எடுத்து, முயல் காது மாதிரி சேர்த்து, அதனிடையே வைத்து போட வேண்டும். இப்படி பார்த்து பார்த்து அர்ச்சனை பண்ணவில்லையானால், தெய்வம் அந்த பிம்பத்தை விட்டு ஓடிவிடுமாம். இதையெல்லாம், பெரியவர்களைப் பார்த்து பழகிக் கொள்ள வேண்டும்.