பதிவு செய்த நாள்
02
நவ
2024
08:11
சென்னை; ‘‘கடவுள் வழிபாடும், பிறருக்கு உதவுவதும்தான் சனாதன தர்மம்,’’ என்று, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் தெரிவித்தார்.
சென்னையில், அக்., 28 முதல், ‘விஜய யாத்திரை’ மேற்கொண்டுள்ள சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில், ஐந்தாவது நாளாக நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
அக்.,30ல் துவங்கிய, ‘சகஸ்ர சண்டி பாராயணம்’ மூன்றாவது நாளாக நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தது. காலை 10:30 மணியிலிருந்து, மாலை 4 மணி வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சன்னிதானத்தை தரிசித்தனர்.
அதைத்தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு, பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில், அவர் தரிசனம் செய்தார். அங்கிருந்து, திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த சன்னிதானத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அவரை வரவேற்றனர். ஸ்ரீமருந்தீஸ்வரர், ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மன் சன்னிதிகளில், பட்டுப்புடவை, வேட்டி, மலர் மாலைகள் சமர்ப்பித்து வழிபட்டார்.
அதைத் தொடர்ந்து, பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். பின், அங்கு திரண்டிருந்த பக்தர்களிடம், சிருங்கேரி சன்னிதானம் வழங்கிய அருளுரை:
நாடு முழுதும் இன்று பல கோவில்களை பார்க்கிறோம். கடவுளை வழிபடுகிறோம். நல்ல செயல்களை செய்கிறோம். இதற்கு, 1,200 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த ஸ்ரீஆதிசங்கரரே காரணம். அவர் அவதரித்த காலகட்டத்தில், ‘நான் வணங்கும் கடவுளே உயர்ந்தவர்; மற்ற சம்பிரதாயத்தினர் வணங்கும் கடவுள் சிறியவர்’ என்று பேசுபவர்கள் அதிகம் இருந்தனர். இப்படி முரண்பட்டவர்களிடம் ஸ்ரீஆதிசங்கரர் ஒற்றுமையை ஏற்படுத்தினார். சனாதன தர்மத்தில் கடவுள் ஒருவர்தான்; அவர் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. இவை அனைத்தும் கடவுளின் அருளை பெறுவதற்கான வழிகளே. கடவுளை அடைய பல வழிகள் இருந்தாலும், கடவுளின் நாமத்தை பாராயணம் செய்தால், கடவுளின் அருளைப் பெற முடியும். செய்த பாவங்கள் தீரும். பாவம் செய்து விட்டு, கடவுளின் நாமத்தை பாராயணம் செய்யலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நாம பாராயணம் என்பது தெரியாமல் செய்யும் தவறுக்கு, அதாவது பாவத்திற்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்பதாகும்.
வேண்டுமென்றே பாவம் செய்து விட்டு, நாம பாராயணம் செய்வது, மருத்துவமனை இருக்கிறது என்பதற்காக விபத்தை ஏற்படுத்துவது போன்றது. விபத்து ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதுபோல, தெரியாமல் பாவம் செய்திருந்து, நாம பாராயணம் செய்தால் மட்டுமே, கடவுளிடம் இருந்து மன்னிப்பு கிடைக்கும். அந்த அளவுக்கு புனிதமானது நாம பாராயணம். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை, கடவுள் கிரந்தங்களில் வரையறுத்துள்ளார். சன்னியாசி, குடும்பஸ்தர், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதன்படி அனைவரும் நடக்க வேண்டும். கடவுள் அனைவருக்கும் நல்லதுதானே செய்ய வேண்டும்; துன்பங்களை ஏன் கொடுக்கிறார் என்று பலரும் கேட்கின்றனர். ஒருவர் என்ன செய்கிறாரோ, அதற்கேற்பவே கடவுள் திரும்ப கொடுக்கிறார். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை, கடவுள் சொல்லியிருக்கிறார். அதை செய்வதற்கான சக்தியையும் கொடுத்திருக்கிறார். எனவே நல்ல செயல்கள் செய்தால் கடவுள் நல்லதை கொடுப்பார். தீய செயல்களில் ஈடுபட்டால் துன்பங்கள் தான் வந்து சேரும். மனிதன் மனதிற்குள் என்ன நினைக்கிறான்; செய்யும் செயல்களை கடவுளுக்கு உடனுக்குடன் தெரியும். அதனால், வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதை பின்பற்ற வேண்டும்.
கடவுளை வணங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது ஆகிய இரண்டையும்தான், ஸ்ரீஆதிசங்கரர் வலியுறுத்தியுள்ளார். நம் சனாதன தர்மம் வலியுறுத்தி சொல்வதும் இதுதான். சனாதன தர்மம் என்றால் என்னவென்று கேட்டால், கடவுள் வழிபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்று சொல்லுங்கள். சனாதன தர்மத்தின் இந்த தத்துவத்தை புரிந்து, அதன்படி நடக்க வேண்டும்.
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களை தெரிந்து கொள்ள, வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். ஏனெனில், மனித பிறவியின் நோக்கத்தை அறிந்து கொள்ள, அதன் தத்துவத்தை அறிந்து கொள்ள, சனாதன தர்மத்தில்தான் வழி உள்ளது. மனிதன் அனுபவிக்கும் சுக, துக்கங்களை அனுபவிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதன் பலன்களை அனுபவிக்க, மனிதன் பல பிறவிகளை எடுத்தாக வேண்டும். எனவே, சாஸ்திரங்கள் காட்டும் வழியில் பயணித்து, இப்பிறவியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஸ்ரீஆதிசங்கரர் சன்னிதியில் தரிசித்தோம். இதுபோல, அனைத்து கோவில்களிலும் ஸ்ரீஆதிசங்கரர் சன்னிதி இருக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும், ஸ்ரீஆதிசங்கரர் படம் இருக்க வேண்டும். இவ்வாறு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை வழங்கினார்.