பதிவு செய்த நாள்
02
நவ
2024
06:11
சென்னை; பழனிக்கு நிகராக சென்னை மாநகரில், வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி விழா, இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் துவங்கியது.
விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை மேல் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானின் அருளைப் பெற்றனர். விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. விழாவின் பிரதான நாளான 7ம் தேதி காலை 6:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது. அதைyfதொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.
வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. நவ., 12ம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.
குன்றத்துார் முருகன் கோவில்; குன்றத்துார் மலை குன்று மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை கந்தபுராண பாராயணம் நடந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 7ம் தேதி நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தேனுபுரீஸ்வரர் கோவில்; மாடம்பாக்கத்தில் பிரசித்திப் பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அருணகிரி நாதரால் பாடல்பெற்ற சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி விழா, நேற்று துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், ஆறாம் நாளான நவ., 7ம் தேதி, 108 பால்குட அபிஷேகம் வெங்கிளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேனுபுரீஸ்வரர் கோவிலை வந்தடைகிறது. அன்று இரவு 7:30 மணிக்கு, சூரசம்ஹாரமும் நடக்கிறது. கடைசி நாளான, நவ., 8ம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.