பதிவு செய்த நாள்
02
நவ
2024
06:11
திருப்போரூர்; திருப்போரூரில் உள்ள கந்த சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 4:30 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்த சுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, காலை 5:30 மணிக்கு, கோவில் சிவாச்சாரியார்களால் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், உற்சவர் கந்த சுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் பிரதான விழாவாக, வரும் 7ம் தேதி, சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 8ம் தேதி திருக்கல்யாணத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.