திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2024 06:11
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகன் கோவில்களில் இன்று முதல் 6வது நாள் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இந்த கந்த சஷ்டி விரதமானது, முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கும். குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து இந்த விரதம் இருந்தால், முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபம் சென்றடைவார். மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி, பின்னர், தங்கத்தேரில் பிரகாரத்தை வலம் வந்து கோயிலை அடைவார். இந்த விழா வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணமும் நடப்பதால், இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.