பதிவு செய்த நாள்
04
நவ
2024
11:11
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே வானராங்குடியில், நாகாம்பிகை உடனுறை நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கல்வெட்டு ஒன்றை படித்து தகவல் அளிக்க வேண்டும் என வானராங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவ்வூரைச் சேர்ந்த முருகேசன், உதயகுமார், எழிலரசன், சிவக்குமார் ஆகியோர் உதவியுடன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லுாரி, தமிழ்துறை இணைப்பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன் அடங்கிய குழுவினர், கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலின் இடப்புறச் சுவற்றில் கல்வெட்டைக் கண்டறிந்து, அதனை படிஎடுத்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கண்ணதாசன், தில்லைகோவிந்தராஜன் ஆகியோர் கூறியதாவது. இக்கல்வெட்டு 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்துத் துண்டுக் கல்வெட்டு என்பது தெரியவந்தது. இக்கல்வெட்டில் மெய்க்கீர்த்தியோ, மன்னனது ஆட்சி ஆண்டோ காணப்பெறவில்லை. பதினெட்டு நாட்டு வைஷ்ணவர் ரக்ஷை என்ற தொடர் இடம் பெற்றிருப்பது கொண்டு, இக்கோவில் சன்னதியில் வீற்றிருக்கும் திருமாலாகிய பத்மநாதசுவாமிக்கு வழங்கப்பட்ட கொடையாக இருத்தல் வேண்டும். இரண்டு விளக்கு எரிக்க வேண்டி சபையோர் நில தானம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு வரிகளின் கடைசியில் சில எழுத்துகள் சிதைந்த நிலையில், செய்தி இடம் பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருக்க வேண்டிய ஸ்வஸ்திஸ்ரீ எனும் மங்கலச்சொல், கல்வெட்டில், இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.