பதிவு செய்த நாள்
05
நவ
2024
10:11
சென்னை; தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோக சிலையை ஒப்படைக்க, அமெரிக்க அருங்காட்சியகம் சம்மதம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்த சோமாஸ்கந்தர் சிலையை, மர்ம நபர்கள் திருடி வெளிநாட்டுக்கு கடத்தி விட்டனர். இதன் சர்வதேச மதிப்பு, 8 கோடி ரூபாய். இச்சிலை, எந்த நாட்டில் உள்ளது என்பது குறித்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில், ‘சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியம்’ என்ற அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தச் சிலை, தமிழக கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை, அமெரிக்க அரசுக்கும், சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியம் நிர்வாகிகளுக்கும் போலீசார் அனுப்பி வைத்தனர். அவற்றை ஆய்வு செய்து, சோமாஸ்கந்தர் சிலையை ஒப்படைக்க, அந்த மியூசியத்தின் நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘கல்வெட்டு குறிப்புகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், சோமாஸ்கந்தர் சிலை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்பதை நிரூபித்துள்ளோம். விரைவில் சிலை மீட்கப்படும்’ என்றனர்.