பதிவு செய்த நாள்
06
நவ
2024
10:11
திருவண்ணாமலை; ‘‘திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபத்தன்று, 11,500 பேர் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்படுவர்,’’ என, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நடை பெற உள்ள கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: தீப திருவிழா டிச.,1ல், தொடங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது. 4ம் தேதி கொடியேற்றம், 13 அதிகாலை பரணி தீபம், மாலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தாண்டு தீப திருவிழாவிற்கு, 35 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மாட வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பரணி தீபத்தின்போது கோவிலுக்குள், 7,050 பக்தர்களும், மஹா தீபத்தின்போது, 11,500 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். பரணி தீபத்துக்கு, 500 ரூபாய் ஆன்லைன் கட்டண அனுமதி டிக்கெட், மஹா தீபத்தின்போது, 1,100 ஆன்லைன் கட்டண அனுமதி டிக்கெட் வழங்கப்படும். மஹா தீபத்தன்று மலை மீது ஏற, 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள், மருத்துவ குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். தீப திருவிழாவின்போது, கோவிலுக்குள் இருதய டாக்டர் உள்பட, ஐந்து மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபடுவர். கோவில் மற்றும் கிரிவல பாதை என ஒட்டு மொத்தமாக, 85 மருத்துவ குழுவினர், தீப திருவிழாவில் பணியாற்ற உள்ளனர். தீப திருவிழாவின், ஏழாம் நாள் விழாவான பஞ்ச மூர்த்திகள் தேரோட்டத்தன்று, மாட வீதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். தங்கும் விடுதிகளில், வழக்கமான கட்டணத்தை விட அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் வரும் பட்சத்தில், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுதி உரிமையாளர்களை அழைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.