பதிவு செய்த நாள்
06
நவ
2024
10:11
ஹாசன்; ஹாசனாம்பா கோவில் உண்டியலில், 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை கிடைத்துள்ளது. கர்நாடகாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், ஹாசனின் ஹாசனாம்பா கோவிலும் ஒன்று. இந்த கோவில் பல சிறப்புகள் கொண்டது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடை திறக்கப்படும். இங்கு ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு, ஆண்டு முழுவதும் அணையாமல் எரிகிறது. அதுமட்டுமின்றி, பிரசாத நைவேத்தியம் கெடாமல் இருப்பது ஆச்சரியமானது. நடப்பாண்டு அக்டோபர் 24ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 3ம் தேதி மதியம் மூடப்பட்டது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஹாசனாம்பாவை தரிசனம் செய்துள்ளனர். கோவில் உண்டியல் எண்ணும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. உண்டியல் காணிக்கை, தரிசன டிக்கெட் விற்பனை, லட்டு பிரசாதம் விற்பனை என, 12.63 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தவிர 51 கிராம் தங்கம், 913 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக கிடைத்துள்ளன. முதன் முறையாக, ஹாசனாம்பா கோவிலுக்கு இவ்வளவு வருவாய் கிடைத்துள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.