பதிவு செய்த நாள்
07
நவ
2024
11:11
துாத்துக்குடி; முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா நவ. 2ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நவ., 7 மாலை 4:30 மணியளவில் திருச்செந்துார் கோயில் முன்புள்ள கடற்கரையில் நடக்கிறது. அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. கோயில் நிர்வாகம் சார்பில் அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ சேவைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 181 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் வந்து செல்வதற்கு ஆங்காங்கே தனித்தனியாக தற்காலிக பஸ் நிலையங்களும், டூ – வீலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனித்தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வரத் துவங்கினர். முருகன்,வள்ளி, தெய்வானை, பெருமாள், விநாயகர் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்தபடி பக்தர்கள் கோயிலை வலம் வந்த வண்ணம் உள்ளனர்.