பதிவு செய்த நாள்
07
நவ
2024
03:11
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் முருகர் கோவில்களில், கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, இன்று முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், ராஜா அலங்காரமும் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மேட்டுப்பாளையம் நகரில் பவானி ஆற்றின் கரையோரம் மிகவும் பழமை வாய்ந்த, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று காலை நடை திறந்து முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பூஜையில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சூரசம்ஹார விழா நடந்தது.
காரமடை அருகே குருந்தமலையில், ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த இரண்டாம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நேற்று மதியம், 2:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பராசக்தி அலங்காரத்தில், முருகர் சுவாமிக்கு சக்திவேல் வழங்கும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை கந்த சஷ்டி விழாயை முன்னிட்டு, மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை காலை திருக்கல்யாண உற்சவமும், மாலையில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. பின்பு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, அபிஷேக பூஜையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் குழு தலைவர் மோகனபிரியா, அறங்காவலர்கள் குழந்தைவேலு, சுரேஷ்குமார், சாவித்திரி, முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.