முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா நவ. 2ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நவ., 7 மாலை 4:30 மணியளவில் திருச்செந்துார் கோயில் முன்புள்ள கடற்கரையில் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. மாலை கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. 2:30 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து, சூரபத்மன், படை, பரிவாரங்களோடு, கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை சுவாமி ஜெயந்திநாதர், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, கடற்கரைக்கு வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் கஜமுகசூரன், சுவாமியுடன் போர் புரிந்தான். தொடர்ந்து, பல்வேறு அவதாரங்கள் எடுத்து, போரிட்டு வீழ்ந்தான்.முடிவில், சூரபத்மன் முருகப்பெருமானிடம் போரிட்டான். ஆணவத்தை அழித்து, அவதார மகிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், செந்திலாண்டவர் வேலால் சூரபத்மனை, மாலை, 5:40 மணிக்கு வீழ்த்தினார். அவன், சேவலாகவும், மாமரமாகவும் மாறி, முருகனிடம் தஞ்சம்அடைந்தான்.சூரனின் தலையை முருகன் கொய்ததும், விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர்.