திருச்செந்துாரில் ஜெயந்திநாதருக்கு சாயாபிஷேகம்; விரதம் நிறைவு செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 01:11
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி யாக சாலை பூஜையுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கந்த சஷ்டி விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கோவில் கடற்கரையில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சேர்ந்தனர். இரவு 108 மகாதேவர் சன்னதி முன் சுவாமி ஜெயந்திநாதருக்கு சாயாபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழகம், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் லட் சணக்கான பக்தர்கள் குவிந்து பரவசத்தை வெளிப்படுத்தினர். சம்ஹாரம் முடிந்ததும் கோவில் வளாகத்தில் விரதம் மேற் கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
இன்று திருக்கல்யாணம்; கந்த சஷ்டி 7ம் நாளான இன்று (8ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு தெய்வானை தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பகுளம் அருகேயுள்ள முருக மடத்தை சென்று சேருகிறார். அங்கு மாலை 6:30 மணிக்கு சுவாமி குமர விடங்கபெருமான் காட்சி கொடுத்ததும், தெற்கு ரதவீதி சந்திப் பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.