கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 27ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து ஏழாவது நாளான இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
வள்ளி தெய்வானையுடன் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கல்யாண சீர்கள், தாலி, மஞ்சள் கயிறு, மணமாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மெட்டி கொண்டு வரப்பட்டு வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நெல்லை உமையொரு பாக ஆதினம் உமா மகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் ஆகியோர் வள்ளி தெய்வானைக்கு சுந்தரவேலவர் சார்பில் திருமாங்கல்யத்தை அணிவித்தனர். மெட்டி அணிவிக்கப்பட்டு மணமாலை மாற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். கந்த சஷ்டி விழாவின் சிறப்பு மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண்பதனால் கிடைக்கும் பலன் குறித்து உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சொற்பொழிவாற்றினார். மாலையில் மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா முடிவடைந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.