பதிவு செய்த நாள்
09
நவ
2024
07:11
சென்னை; சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், 12வது நாளாக நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்; தி.நகரில் உள்ள ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைத்தார்.
விஜய யாத்திரையாக சென்னை வந்துள்ள சன்னிதானம், அக்., 28 முதல், பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் தங்கியும், சென்னையில் உள்ள சிருங்கேரி கிளை மடங்களுக்கு விஜயம் செய்தும், பக்தர்களுக்கு ஆசியும், அருளுரையும் வழங்கி வருகிறார். தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீசாரதாம்பாள், ஸ்ரீ ஆதிசங்கரர் சன்னிதிகளுக்கு நேற்று காலை, சன்னிதானம் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மூன்று சன்னிதிகளிலும் சிறப்பு பூஜைகள் செய்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீசாரதாம்பாளுக்கு சென்னை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளி அங்கியும் அணிவிக்கப்பட்டது. கடந்த 1995ல் சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி மகா சன்னிதானம் ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள், தி.நகர் சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் மகா கணபதி, தேவி சாரதாம்பாள், ஸ்ரீ ஆதிசங்கரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட இந்த மூன்று சன்னிதிகளுக்கும், சிருங்கேரி சன்னிதானம் நேற்று கும்பாபிஷகம் நடத்தி வைத்தார். தி.நகர் பாரதி வித்யாஸ்ரமத்தில் உள்ள தியான மண்டபமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு வேத பாடசாலை, ஸ்லோக பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பல்வேறு சேவை பணிகளும் நடப்பதாக மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருப்பதி தேவஸ்தானம்: சிருங்கேரி சன்னிதானம் நேற்று மாலை 6:30 மணிக்கு, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் தரிசனம் செய்தார். அவரை, கோவில் நிர்வாகிகள் சேகர் ரெட்டி, பார்த்தசாரதி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் சுதர்மா இல்லம் சென்றார். அங்கு, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின், 10, 11 மற்றும் 12வது பீடாதிபதிகளான ஸ்ரீ வித்யாதீர்த்தர், ஸ்ரீ பாரதீ தீர்த்தர், ஸ்ரீ வித்யாரண்யர் ஆகியோரின் நினைவாக நடத்தப்படும் ‘குருத்ரய சம்ஸ்மரணம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது.
சிருங்கேரி சன்னிதானம் வழங்கிய அருளுரை: நாடு முழுதும் விஜய யாத்திரை மேற்கொண்ட ஸ்ரீவித்யாரண்யர், ‘தாங்கள் செல்லும் இடங்களில், எங்கும் சேதமடைந்த கோவில்கள் இருக்கக் கூடாது. ஏழைகள் இருக்கக் கூடாது’ என, மன்னர்களுக்கு அறிவுறுத்தினார். வெளியில் இருந்து வந்தவர்கள் நம் கோவில்களை அழித்தனர்.
ஆன்மிக சேவை: அதையெல்லாம் மன்னர்கள் வாயிலாக ஸ்ரீவித்யாரண்யர் சரி செய்ய வைத்தார். ஸ்ரீ ஆதிசங்கரர் போல பல தத்துவ நுால்களை எழுதியுள்ளார். அவற்றை இன்றும் பண்டிதர்கள் கொண்டாடுகின்றனர். பக்தர்களுக்கு தர்ம வழிகாட்ட, நாடு முழுதும் தேவையான சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் கிளைகளை ஸ்ரீவித்யாரண்யர் துவக்கினார். அதன்பின் வந்த பீடாதிபதிகளும் பல்வேறு கிளை மடங்களை துவக்கினர். அதன் வழியாக இன்று, நாடு முழுதும் ஆன்மிக சேவை பணிகள் நடக்கின்றன. இவ்வாறு சன்னிதானம் அருளுரை வழங்கினார்.