பதிவு செய்த நாள்
09
நவ
2024
10:11
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்வு முருகன் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜா சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் கிழக்கு முகமாக வீற்றிருக்கும் முருகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தினமும் உற்சவர் சுவாமி கோவில் பிரகாரம் வீதி உலா நடைபெற்ற நிலையில் கோவில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிருதம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை சிறப்பு பூஜைகள் செய்து பல வண்ண பூக்களின் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நேற்று உற்சவமூர்த்தி முருகர் பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து காப்புக் கட்டுதல், மாலை மாற்றுதல் நடைபெற்று, முருக பெருமானுக்கு பட்டாடை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தர்கள் அரோரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.