பதிவு செய்த நாள்
10
நவ
2024
07:11
சென்னை; ‘‘கோவிலுக்கு சென்றால், மனம் முழுதும் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்,’’ என, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சன்னிதானம், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், 14வது நாளான இன்று காலை, வடபழநி முருகன் கோவிலில், தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவரை, கோவில் தக்காரும், ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று, ஒவ்வொரு சன்னிதியாக அழைத்துச் சென்றனர்.
தரிசனத்திற்கு பின், பக்தர்களுக்கு சன்னிதானம் வழங்கிய அருளுரை: நாட்டு மக்கள் அனைவருக்கும், கடவுள் அருள்புரிய வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என, வடபழநி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்தோம். நம் சனாதன ஹிந்து தர்மத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீஆதிசங்கரர். அவர் இயற்றிய சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரம் நுாலில், கோவிலுக்கு வந்துவிட்டால், எதை பார்க்க வேண்டும், எதை கேட்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறார். கோவிலுக்கு வந்துவிட்டால், கண்கள் கடவுளை மட்டுமே தரிசிக்க வேண்டும்; கடவுள் பற்றிய வரலாறு, கடவுளின் ஸ்லோகங்களை மட்டுமே சொல்ல வேண்டும்; காதுகளால் கேட்க வேண்டும்; கைகளால் பூஜை செய்ய வேண்டும். மனம் முழுக்க இறைவனை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் வலியுறுத்தியுள்ளார். கோவிலுக்கு வந்துவிட்டால் வேண்டாத பேச்சுகளை பேசக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கக் கூடாது. என்ன செய்தாலும், அது இறைவனுக்கு உரியதாகவே இருக்க வேண்டும் என்பதை, ஸ்ரீஆதிசங்கரர், சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரத்தில் வழிகாட்டியுள்ளார்.
வடபழநியில் ஸ்ரீதண்டாயுதபாணி சன்னிதியில் தரிசனம் செய்து விட்டு வரும்போது, அம்பாள் சகிதமாக இருக்கும் ஸ்ரீ சண்முகம் சுவாமியை தரிசனம் செய்தோம். அப்போது முருகனின் ஆறுமுகங்கள் குறித்து, சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரத்தில் ஸ்ரீஆதிசங்கரர் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. வானில், ஆறு முழு நிலவுகள் ஒரே நேரத்தில் தோன்றினால், எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல, முருகனின் ஆறு முகங்கள் இருக்கும் என, வர்ணிக்கிறார். காலங்காலமாக, நாம் முருக கடவுளை வழிபட்டு வருகிறோம். முருகப் பெருமானின் அருள் நிறைந்திருக்கும் வடபழநி முருகன் கோவிலில் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். வடபழநி கோவிலுக்கு நாம் வர வேண்டும் என விரும்பி அழைத்து, சிறப்பான ஏற்பாடுகளை இக்கோவிலின் தக்கார் எல்.ஆதிமூலம் செய்துள்ளார். பல ஆண்டுகளாக வடபழநி முருகன் கோவில் தக்கராக இருந்து வரும் அவர், கோவிலில் அனைத்தையும் நன்றாக செயல்படுத்தி வருகிறார். அவருக்கும், கோவிலின் மற்ற நிர்வாகிகளுக்கும் ஆசிர்வாதத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, சிருங்கேரி சன்னிதானம் அருளுரை வழங்கினார்.
விஜய யாத்திரை நிகழ்ச்சி நிரல்;
நாளை 11.11.2024 திங்கள்கிழமை நிகழ்ச்சிகள்நேரம் பங்கேற்கும் இடங்கள்
காலை 10:45 மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் பக்தர்கள் தரிசனம், பாத பூஜைமதியம் 12.00 சங்கீத சமர்ப்பணம்மதியம் 12.30 சிருங்கேரி சன்னிதானம் நடத்தும் கார்த்திகை சோமவார பூஜைமாலை 6:00 ஆராதனா ஆனந்த குழுவினரின் ஹரிகதா இசை சொற்பொழிவுஇரவு 8:00 சங்கீத சமர்ப்பணம்இரவு 8:30 ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை.