பதிவு செய்த நாள்
10
நவ
2024
10:11
சென்னை; ‘‘சனாதன தர்மத்தின் ஆதாரத்தில் வாழும் குடும்ப அமைப்பு நசிந்து கொண்டிருக்கிறது,’’ என காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில், கடந்த ஒரு வாரமாக, ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜய யாத்திரை செய்து வருகிறார். நேற்று அங்குள்ள புகழ்பெற்ற தர்மஸ்தாலாவுக்கு, அதன் தர்மாதிகாரி, ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே அழைப்பின்பேரில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார். அவருக்கு ஊரின் நுழைவு வாயிலில், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்மஸ்தாலா சென்ற, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு ஆசி உரை வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது: தர்மஸ்தலத்தின் தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே, அசாதாரண சேவைகள் மற்றும் சாதனைகள் புரிந்துள்ளார். திறமையான பணி நெறிமுறை, சிறந்த தலைமை, சமூக சேவை காரணமாக, ராஜ்யசபா எம்.பி.,யானார்.
என் குருநாதர் காஞ்சி காமகோடி பீடத்தின், 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 50 ஆண்டுகளுக்கு முன், கால்நடையாக தர்மஸ்தாலாவுக்கு வருகை புரிந்துள்ளார்.தற்போது இங்கு இயங்கிவரும், அன்னதானக் கூடம், 20 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் துவக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த அன்னதான கூடத்தை, நவ., 14ல் திறந்து வைக்க அழைத்துள்ளனர். சனாதன தர்மத்தின் ஆதாரத்தில் வாழும் குடும்ப அமைப்பு, நசிந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில், தர்மஸ்தலத்தில் கிராமப்புற வளர்ச்சியுடன், ஒரு தார்மீக நகரத்தையே ஸ்ரீ ஹெக்டே உருவாக்கி உள்ளார். நாம் வறுமையை ஒழிப்பதுடன், மனித நேய உணர்வின் வறுமையையும் நீக்க வேண்டும். கல்வி, கலை, அறிஞர்களை பாதுகாக்க வேண்டும். நாட்டின் தலைநகராக டில்லி இருப்பது போல், தர்மஸ்தாலா, தர்மத்தின் தலைநகராக அமைந்துள்ளது. திருப்பதி போன்று தர்மஸ்தாலா வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.