பதிவு செய்த நாள்
13
நவ
2024
03:11
பாலக்காடு; கல்பாத்தி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து திருத்தேர்கள் இழுத்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர் திருவிழா, ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழா, கடந்த வாரத்தில் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. இதை முன்னிட்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசித்து அருள்பெற்றனர். தொடர்ந்து விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி -தேவசேனா சமேத சுப்ரமணியர், கணபதி சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் எழுந்தருளினர். பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர்கள் பவனி வந்தன. விழாவில், இரண்டாம் நாளான நாளை மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை மறுதினம் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டமும், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில் தேரோட்டமும் துவங்குகின்றன. மாலை, 6:00 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, தேர் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.