பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
புனர்பூசம் 4 ம் பாதம்; திடமான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் அவர் வழங்கிய யோகப்பலனில் மாற்றம் இருக்கும். சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனமாக செயல்படுவது அவசியம். உடல் நிலையில் ஏதேனும் சிறு சங்கடங்கள் ஏற்படலாம். அல்லது, உங்களுடைய செல்வாக்கில், அந்தஸ்தில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. கேது நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். ராகு உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை வழங்குவார். இக்காலத்தில் இஷ்ட தெய்வ கோயில்களுக்கு சென்று வருவதன் வழியாக சங்கடம் விலகும். பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் படபடப்பு, வேகம் என்பதெல்லாம் இருக்கும். அதன் காரணமாக உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். இக்காலத்தில் குடும்பத்தினரின் ஆலோசனைகளை ஏற்பதும், அனுசரித்துச் செல்வதும் நல்லது. பணிபுரியும் இடத்தில் உங்களுடைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 7.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 21, 29, 30. டிச. 2, 3, 11, 12.
பரிகாரம்: நவகிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.
பூசம்; மனதில் சரி என பட்டதை செய்யும் தங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சனி பகவான் ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பதால் ஏதாகிலும் ஒரு வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடல் நிலையிலும் சிறு பாதிப்பு ஏற்படலாம். இதுவரை வேகமாக நடைபெற்று வந்த வேலை, கிடைத்த வருமானத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வீண் பிரச்சனைகளும் தேடி வரும். வாகனப் பயணத்தில் நிதானம் காப்பதும், இயந்திரப் பணிகளில் கவனமாக செயல்படுவதும் நன்மையை உண்டாக்கும். மேல் அதிகாரிகளையும் அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி நீங்கும். குடும்ப உறவுகளிடம் முடிந்த வரை இணக்கமாக செல்வது நல்லது. குழந்தைகள் மீது இக்காலத்தில் அக்கறை கொள்வது அவசியம். அவர்களுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யும்போது யோசித்து செய்வது நல்லது. ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும் வார்த்தைகளால் சங்கடம் உண்டாகும். கேதுவால் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய சக்தியும் ஏற்படும். வாழ்க்கைக்கேற்ற வருவாய் வரும். அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வாழ்க்கைக்குத் தேவையானவற்றில் மட்டும் கவனத்தையும், உழைப்பையும் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
சந்திராஷ்டமம்: டிச. 7, 8.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29. டிச. 2, 11.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும்.
ஆயில்யம்; வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். செயல்களில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யும்போது நன்றாக யோசிப்பது நன்மையாகும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் கவனம் தேவை. பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்கள் பணியில் நேர்மையாக செயல்படுவது அவசியம். பூர்வீக சொத்துகள் விஷயத்தில் பிரச்னை ஏற்படும். அதை சட்டரீதியாக எதிர்கொள்வது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனைக்கு இக்காலத்தில் மதிப்பளிப்பதும், பெரியோரை அனுசரித்துச்செல்வதும், உடன் பணிபுரிபவருடன் மோதல் போக்கை காட்டாமல் இருப்பதும் பெரிய நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். சனி பகவானால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். கவனக்குறைவால் சிறு விபத்துகளையும் சந்திக்க நேரும். ஒரு சிலருக்கு எதிர்பாலினரால் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். கேதுவால் அவற்றிலிருந்து விடுபடக்கூடிய நிலையும் உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார். எதிர்பார்த்த பணம் வரும். புதிய சொத்து வாங்கும்போது மூல பத்திரத்தை நன்றாக கவனிப்பதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக படித்துப் பார்ப்பதும் நல்லது. அரசு வழி முயற்சி, வழக்கு தள்ளிப்போகும். அவற்றால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது சிறப்பு.
சந்திராஷ்டமம்: டிச. 8, 9.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 2, 5, 11, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.