பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
சித்திரை 3, 4 ம் பாதம்; விடாமுயற்சியை உயிராகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயலில் தெளிவு இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். குரு பகவானின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு இல்லாமல் போனதால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். உடல் நிலையில் ஏதேனும் சிறு சங்கடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். வீண் செலவு அதிகரிக்கும். இருந்தாலும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் ஆற்றல் வெளிப்படும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். அலுவலகம், வியாபாரம் போன்ற இடங்களில் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள். சப்தம் ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் நண்பர்களுடனும், வாழ்க்கைத் துணையுடனும் இணக்கமாக செல்வது நன்மைக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் அதுபற்றி நன்றாக யோசிக்க வேண்டும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்ரனின் ஆதரவும், மாதத்தின் பிற்பகுதியில் புத பகவானின் சஞ்சார நிலையும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நெருக்கடி இல்லாமல் போகும். பொன் பொருள் சேரும். ஒரு சிலருக்கு புதிய சொத்துகள், வாகனம் சேரும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: நவ.16. டிச. 13.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.
பரிகாரம்: ராஜேஸ்வரியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சுவாதி; சத்தமில்லாமல் எங்கும் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திரநாதன் ராகு பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடி வந்தாலும் அவற்றிலிருந்து உங்களால் விடுபட முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்துவீர். வெளியூர் பயணம் லாபம் தரும். வழக்கு சாதகமாகும். நினைத்ததை சாதிக்கக் கூடிய நிலை ஏற்படும் என்றாலும், 5ல் வரும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம், லாப ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவில் கவனமாக வேண்டும். உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. 2 ம் இடத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் அடிக்கடி கோபம் ஏற்படும். வார்த்தை சூடாக வரும் என்பதால் அதுவே எதிரியாக மாறும். இக்காலத்தில் நண்பர்களுடனும், வாழ்க்கை துணையுடனும் இணக்கமாக இருப்பதும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் முயற்சிகளை வெற்றியாக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு உங்களைப் பாதுகாக்கும். சுக்ரனும், புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தேவையற்ற ஆசைக்கு இடம் கொடுக்காமல் நேர்மையான வருமானத்தில் கவனம் செலுத்துவதால் முயற்சி லாபமடையும். வியாபாரம் முன்னேற்றமடையும். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் நேர்மையுடன் செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. உழைப்பாளர்களுக்கு தேவைக்கேற்ற வருவாய் வரும்.
சந்திராஷ்டமம்: நவ.17., டிச. 14.
அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 24. டிச. 4, 6, 13, 15.
பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்; திட்டமிட்டு செயல்படும் சக்தியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். நட்சத்திர நாதன் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயல்களில் சில குழப்பம் ஏற்படும். திட்டமிடாமல் செயல்பட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் கவனம் தேவை. முதலீடு செய்வதற்கு முன்பாக ஒன்றிற்கு இரு முறைக்கு யோசித்து செயல் பட வேண்டும். லாபம், தனஸ்தானத்தில் சனியின் பார்வைகள் இருப்பதால் வருமானத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதும், பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து குறித்து பிரச்னை உருவாகும். அதை உடனடியாக முடிவிற்கு கொண்டு வராமல் வழக்கு வழியாக தீர்த்துக் கொள்வது நன்மை தரும். ராகு உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதிலிருந்து பாதுகாப்பார். உடல் நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வழக்குகள் வெற்றியாக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். பொது வாழ்வில் இருப்போர் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருப்பது பெரும் இழப்பில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். இரவுப் பயணங்களில் சில நெருக்கடி தோன்றும் என்பதால் விழிப்புணர்வு அவசியம், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: நவ. 18., டிச. 15.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12, 15.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.