பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்; நீதிநெறிக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். புதிய தொழில் முயற்சிக்குரிய அனுமதி கிடைக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும் வாரமிது. அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். குரு பகவான் வக்ரம் அடைந்திருந்தாலும் அவருக்குரிய பலன்களை சூரியன் வழங்குவார். ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கும் சுக்ரன் பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். புதிய வாகனம் வாங்குவீர். உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் பகவானால் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். நட்பு வட்டத்தில் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவதும் நல்லது. உங்கள் ராசி நாதன் பாதச் சனியாக சஞ்சரிப்பதுடன், 4, 8, 11 ம் இடங்களையும் பார்ப்பதால் உடல்நிலையிலும், வருமானத்திலும் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம்: நவ. 22, 23.
அதிர்ஷ்ட நாள்: நவ.17, 19, 26, 28. டிச. 1, 8, 10.
பரிகாரம்: திருவல்லீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
திருவோணம்; திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றம் கண்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதம். குரு, செவ்வாய், ராகு ஆகியோர் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்குவார்கள். மேற்கொள்ளும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிப்பார்கள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபத்தை காணக்கூடிய நிலையினை ஏற்படுத்துவார். இந்த நேரத்தில் சூரிய பகவான் உங்கள் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தை உண்டாக்குவார். தடைபட்டிருந்த வருமானம் வரத் தொடங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பயணத்தினால் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வர். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அதிர்ஷ்டக் காரகனான சுக்ரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எதிர்பாலினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். எந்த ஒன்றிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது அவசியம். உடல்நிலையிலும், உங்கள் செல்வாக்கிலும் எப்போதும் கவனம் வேண்டும். அது மட்டுமே உங்கள் நிலையை மேலும் உயர்த்தும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: நவ. 23, 24.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 26, 29. டிச. 2, 8, 11.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்; நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். எந்த ஒன்றிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தவறான நட்புகளை நீக்குவதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. மாதம் முழுவதும் சூரிய பகவான், ராகு, சுக்ரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வந்து இணைவார்கள். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அனைத்தும் சாதகமாகும். முடங்கிக் கிடந்த தொழில்களில் யாவும் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் மங்கள ஓசைக்கான அறிகுறி தென்படும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு மனதிற்கு பிடித்த புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 24, 25.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9.
பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.