பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
பூரட்டாதி 4 ம் பாதம்: திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவான் சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். திட்டமிடாமல் செயல்பட்டு சில வேலைகளில் அவதிப்பட வேண்டிய நிலை உண்டாகும். கேது பகவான் சஞ்சரிப்பதால் நண்பர்களின் வழிகாட்டுதல் தவறான பாதையில் அழைத்துச் செல்லும். குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படும். செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய பிரச்னைகள் உருவாகும். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எதிர்பாராத நெருக்கடி தோன்றும். உறவினர்களுடன் இதுவரை இருந்த இணக்கமான நிலை இப்போது இல்லாமல் போகும். சனி பகவானின் பார்வையால் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதும், பண விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது நன்மையில் முடியும். யாருக்கும் எந்த விதமான வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். எதிர்பாலினர் விஷயத்தில் மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சிலர் சொத்துகளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ. 27.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 30. டிச. 3, 12.
பரிகாரம்: மூகாம்பிகையை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி ; நடப்பது எல்லாம் புண்ணிய பலன்களே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் நிலையில் செலவு பல வகையிலும் அதிகரிக்கும். அவருடைய 3 ம் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் சிறு சிறு பிரச்சனை உண்டாகும். பணவரவிலும் நெருக்கடி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் சில வேலைகளை மேற்கொண்டு அதனால் அவதிக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். உங்களுக்கும் கீழானவர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களால் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும். ஒரு சிலர் உங்களைத் தவறான வழிக்கும் அழைத்துச் செல்வார்கள். ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஒரு சிலருக்கு இருக்கும் சொத்துகளை விற்று கடன்களை அடைக்க வேண்டிய நிலை உருவாகும். பணிபுரியும் இடத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். மாணவர்கள் மாதம் முழுவதும் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: நவ. 28, 29.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 21, 26, 30. டிச. 3, 8, 12.
பரிகாரம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும்.
ரேவதி; முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் அமைதியாக செயல்பட வேண்டிய மாதம். புதிய முயற்சிகளில் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் நிதானமாக செயல்படுவது நன்மையாக இருக்கும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன்னதாக நன்றாக யோசிக்க வேண்டும். கடன் கொடுப்பது வாங்குவது போன்ற வேலைகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. விரய ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சுக்ரன் உங்கள் செயல்களில் சங்கடத்தை ஏற்படுத்தும். வருமானத்தில் தடைகளை உண்டாக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் பெருமளவில் சங்கடம் ஏற்படாமல் போகும். அதே நேரத்தில் சனி பகவான் அருளால் எதிர்வரும் பிரச்னைகளை எல்லாம் சமாளித்து விடக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் சிகிச்சையின் மூலமாக நிவாரணம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். போட்டிகளை சமாளித்திடக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். அடுத்தடுத்த மாதங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இந்த மாதத்தில் ஒவ்வொரு வேலையிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது உங்களுக்கு நன்மைகளை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ. 29, 30.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, டிச. 3, 5, 12, 14.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடும்.