உணவின்றி உயிரில்லை.. உயிரின்றி உலகில்லை; ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2024 12:11
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது. அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது. அன்னம் ப்ராணாவோ அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது. அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும். சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள். சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது. வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும். சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும். ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.